பிழைத்தல், இருத்தல், வாழ்தல்
சில வருடங்களுக்கு முன்னர் கவிஞர் தேவதேவன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது என் மனைவி அருண்மொழிநங்கை அவரிடம் கேட்டாள். “சார், நீங்கள் எப்போதுமே பசுமையைப்பற்றியும் மலர்களைபற்றியும் வழிகளை திகைக்கவைக்கும் காடுகளைப் பற்றியும் எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் வாழும் தூத்துக்குடி நகரம் கிட்டத்தட்ட ஒரு பாலைவனம் போல. தொழிற்சாலைக்கழிவுகளும் மொட்டைப்பனைமரங்களும் நிறைந்த துறைமுக நகரம் அது….நீங்கள் எங்கிருந்து உங்கள் மனத்தூண்டலைப் பெறுகிறீர்கள்?’’

வழக்கம்போல தேவதேவனால் அதை விளக்கிச் சொல்லமுடியவில்லை. குழந்தையைப்போன்ற கவிஞர் அவர். அவரால் கவிதையின் வழியாக மட்டுமே சிறப்பாகப் பேசமுடியும். ஆனால் சில நாட்கள் கழித்து ஊருக்குச் சென்றபின் அவர் ஒரு கவிதையை அனுப்பியிருந்தார். ஒரு புல் நுனியைக் கொண்டு… என்ற அக்கவிதையில் அவர் அக்கேள்விக்கு பதில் சொல்லியிருந்தார். ஒரு புல்நுனியைக்கொண்டு எனக்கான காட்டைப் படைத்துக்கொள்கிறேன் என்று…

நான் சிறுவயதில் மிகச்சிறிசெடிகளை ஆலமரங்காளாகவும் செடிக்கூட்டங்களை அடர்காடுகாளாகவும் கற்பனைசெய்து அக்காடுகளுள் என் கற்பனையால் நுழைந்துகொண்டு சாகச அனுபவங்களை அடைவதுண்டு. நம்மில் பெரும்பாலானவர்கள் அத்தகைய அனுபவங்கள் வழியாகக் கடந்து வந்தவர்களாகவே இருப்போம். ஆகவேதான் நமக்கு லூயி கரோலின் உலகம் அத்தனை தெரிந்ததாக இருக்கிறது. நாம் வளரும்போது நம் யதார்த்த உணர்வு வளர்கிறது. செடி செடியாக மட்டுமே தெரியும் ஒரு நிலையை நாம் அடைகிறோம்.நம்முள் இருக்கும் ஆலீஸை நாம் இழக்கிறோம்.

உங்ளுக்குக் கற்பனை இருந்தால் ஒரு கூழாங்கல்லால் நீங்கள் ஒரு மலையை உருவாக்கிக் கொள்ள முடியும். இப்பிரபஞ்சத்தின் பிரமண்டமான அளவை வைத்துப்பார்க்கும்போது கூழாங்கல்லும் மலையும் எல்லாம் ஒன்றுதான் என்ற விவேகம் இருந்தால் அது ஒரு மலை நமக்கு எதையெல்லாம் அளிக்கிறதோ அதையெல்லாம் அளிக்கும்.

நண்பர்களே நான் நேற்று சாஸ்தா எரிமலையை சென்றுபார்த்தேன். எத்தனை எத்தனை கற்பனைகள் வழியாகக் கடந்துசென்றது என் மனம்.! பாலபிஷேகம் செய்யப்பட்ட சிவலிங்கத்தின் கரிய கல் முடி. முல்லைமலர்கள் உதிர்ந்துகிடக்கும் மாமதயானையின் மத்தகம். அந்த மலையில வெண்மையாக வழிந்த வெள்ளிப்பிரகாசம் கொண்ட மெல்ல வழிவதுதான் என் பிரக்ஞை போலும் என்று உணர்ந்த கணங்கள்.

ஒரு கூழாங்கல்லில் இருந்து ஒரு மலையை உருவாக்கிக் கொள்ளும் பிரக்ஞை சாஸ்தா மலையில் இருந்து எதை உருவாக்கிக் கொள்ளும் ?

இருபத்திரண்டு வருடங்கள் தாண்டிவிட்டன. நான் ஒரு துறவியுடன் நடந்துகொண்டிருந்தேன். அவர் கன்னடத்தைச் சேர்ந்தவர். எங்களுக்குள் அதிக பேச்சு இல்லை. நான் மலையேறும் வழியில் அவரைக் கண்டுகொண்டேன். ஒரு வழித்துணை. இமயமலையில் வழித்துணைகள் ஒருபோதும் நீடித்த உறவுகள் ஆவதில்லை. ஆக அவர்கள் விடுவதில்லை. ஓங்கி உயர்ந்த மலைச்சரிவுகள் நடுவே மலைக்கு பொன் அரைநாண் சுற்றிக்கட்டியதுபோல சுழன்றுசெல்லும் செம்மண்பாதை. பக்கவாட்டில் சரிந்திறங்கி நெஞ்சுநடுங்கும் பள்ளத்தில் சரிகைவரியெனக் கிடக்கும் பெயரிடப்படாத சிற்றோடையைஅடையும் நிலம். எதிரே மௌனன வரிசைகளாக எழுந்து எழுந்து வந்துகொண்டிருக்கும் இமயமலைக்குவடுகள்,

பின்னர் அந்தத்துறவி சுட்டிக்காட்டினார். என்கண்கள் வேறெங்கோ இருந்தன. இமயமலைப்பாதையில் நம்முடைய திசைபோதம்தான் முதலில் நம்மைக் கைவிடுகிறது. துறவி மீண்டும் என்னை தொட்டுச் சுட்டிக் காட்டினார். வெண் பனிக்குவியல் போன்ற மேகம் ஒன்று வானில் கண்கூசும் ஒளியுடன் நின்றது. அதன் புகைமடிப்புகளுக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் ஒளி பீரிடுவதுபோல் இருந்தது. நான் எதையும் பார்க்கவில்லை. பார் பார் என்றார் அந்த துறவி. சட்டென்று நான் கைலாயமலைமுடியை கண்டுகொண்டேன்

வெண்பனி போர்த்திய ஒரு குவடு. ஒரு மணிமுடி சிரமில்லாது அந்தத்தில் நிற்பது போல. கண்ணுக்குத்தெரியாத மாபெரும் ஆலயம் ஒன்றின் கோபுரசிகரம் போல. ஒரு வெள்ளிக்குடை போல. வெயில் அப்படியே பொருண்மைகொண்டதுபோல. ஆம், சிவபெருமான் ஏறிய வெண்காளையின் மருப்பு போல…

பின் அந்திவரை அந்தக் காட்சியில் நின்றேன். மலைமுகடு சிவந்து பொன்னாகிய உருகிஉருகி உருகாத தங்கமாக வானில் நின்ற அது என் வாழ்வில் ஒருதருணம். வாழ்க்கையின் சில தருணங்காளே வாழ்க்கையின் அனைத்து அர்த்தங்களையும் தன்னுள் ஏற்றிக்கொண்டு மையமாகின்றன. அந்தத் தருணம் அது.

அந்தத்தருணத்தில் நான் திருவண்ணாமலையை எண்ணிக்கொண்டேன். எண்ணிக்கொண்டேன் என்பது எளிமையான சொல்லாட்சி. திருவண்ணாமலையும் கயிலையும் என் அகத்தில் ஒன்றாக இருந்தன. அதற்கும் இரு வருடங்களுக்கு முன்னர் நான் திருவண்ணாமலையில் இருந்தேன். அதேபோல நிலையற்றவனாக. அந்த அந்தியில் நான் மலைச்சரிவில் ஒரு பாறையில் அமர்ந்திருந்தேன். தன்னந்தனியாக. மலை என் முன் சிவந்து சிவந்து பிழம்பாகி இருளில் மூழ்கி அணைந்தது. மலையின் கரிய கோட்டுவடிவம் மட்டும் வானுக்கு விளிம்பிட்டு நின்றது. ‘இதுவே இதுவே’ என்ற ஒரு சொல்லாக இருந்தது என் மனம்.

நண்பர்களே, வெள்ளிமுடிசூடி மூன்றுமுகம் நிமிர்த்தி நின்ற சாஸ்தா மலை எனக்களித்த அனுபவத்தில் திருவண்ணாமலையும் கைலாயமும் இருந்தது. இன்னும் நான் கண்ட எத்தனையோ மலைகள் எத்தனையோ குன்றுகள்.

சாஸ்தா மலை என்பதென்ன? பூமியின் தோலிலொரு சிறு கொப்புளம் அன்றி? ஆமாம், ஒரு சிறு கூழாங்கல். ஆனால் அதில் ஏறி விண்ணில் எழுந்த பிரக்ஞ்சை சிலகணங்களேனும் எதுவும் தானாகி தானன்றி பிறிதிலாது நின் பெருவெளியின் தரிசனத்தை தான் அடைந்து மீண்டது.

அவ்வெனும் எழுத்தினால் அகண்டமாகி நின்றனை
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து வந்தனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அகர உகர மகாரமாய்நின்றதே சிவாயமே.

என்ற சிவவாக்கியர் பாடலை பின்னர் எண்ணிக்கொண்டேன். அகண்டமாக, பிரிவிலாததாக, முழுமையாக நின்ற வெளி. அது உருத்தரித்து வந்து நிற்கிறது. அதை மலையென்றும் மடுவென்றும் ஆறென்றும் பாலையென்று மயங்கும் அலகிலாத விளையாட்டு.

இந்தமண்ணில் வாழ்ந்த தொல்குடிகள் அந்த மலையை கண்டு அடைந்தது அந்த பேரனுபவத்தையே. ஆகவேதான் அவர்கள் இதையே இறையுருவென வழிபட்டார்கள். கால்களில் பணிவையும் கருத்திலே விரிவையும் கொள்ளாமல் ஒருவன் இதன் மீது ஏறக்கூடாதென அவர்கள் எண்ணினார்கள். அப்படி ஏறுபவர்களை தங்கள் எதிரிகளாகக் கண்டார்கள்.

ஆனால் பிரபஞ்சத்தையும் பூமியையும் எந்திர கட்டமைப்பாகக் கண்ட ஒரு பெரும் சமூகம் தங்கள் எந்திரங்களுடன் அவர்கள் மீது படையெடுத்து அவர்களை வென்றது. அந்தமலையை உரிமைகொண்டது. எதுவுமே அவர்களுக்கு எந்திரங்கள் தான். எந்திரங்கள் எல்லாமே அவர்களுக்குப் பணிசெய்ய காத்திருப்பவைதான்.

அந்தமலை அவர்களுக்கு நாய்பதெங்கம் பழம். அவர்கள் அதை எப்படி பயன்படுத்த முடிய.நான் அநத மலையை சைக்கிளில் ஏறிச்செல்லும் குழுக்களை பார்த்தேன். அதில் நடந்தேறி மறுபக்கம் இறங்கி செல்பவர்களை பார்த்தேன். யாஹூ என்று கூச்சலிட்டபடி வண்டிகள் அதிரச் செல்கிறார்கள். பாவம் எத்தனை பரிதாபகரமான மக்கள். அந்தமலையை நெருங்க நெருங்க அவர்கள் அடைவது வெறும் கற்குவியலை எரிமலைச் சாம்பல் புழுதியை அதன்மீது படிந்த உறைந்த தண்ணீரை மட்டுமே. சாஸ்தா மலை என்னும் அந்த பேரெழுச்சியை அவர்கள் அடையவே போவதில்லை.

காற்றில் அபார நடனமிடும் இந்த இலைகளை கையால் பற்றும்போது இலை மட்டும்தான் சிக்குகிறது, ஆட்டம் எங்கோ போய் ஒளிந்துகொள்கிறது என்றார் தேவதச்சன் ஒரு கவிதையில். மலைகளை வெறும் தடைகளாக மட்டுமே காணும் மனநிலையில், மலைச்சிகரங்களை சவால்களாக மட்டுமே காணும் மனநிலையில் ஒருவன் காண்பது வெறும் அகங்கார தரிசனம் மட்டும்தானே? ஒரு முழம் துண்டை உடுத்துக்கொண்டு இமயக்குளிரில் ஏறி மானசரோவர் ஏரியில் நீராடும் சடைமுடிச் சாமியார் இதைவிட பலமடங்கு பெரிய சாகசக்காரன். ஆனால் அவனுக்கு மலைகள் வெறும் அறைகூவல்கள் அல்ல. அவை ஆசியளதினவிரல்நுனிகள். அவன் காணும் மலையை இவன் என்றாவது காணமுடியுமா?

ஓஷோ ஓர் உரையாடலில் சொல்கிறார். சாதாரணமாக ஒருவன் எண்பது வயது வரை வாழ்ந்தான் என்றால் வயதான காலத்தில் அவன் உண்மையான உச்ச அனுபவத்துடன் வாழ்ந்த நேரம் என்பது ஒருமணிநேரத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று. சில கணங்களுக்கு மேல் நீடிக்கும் வெற்றிக்களிப்பு இல்லை. சில கணங்களுக்கு மேல் நீடிக்கும் அடைதலின் உவகை இல்லை. சில கணங்களுக்கு மேல் நீடிக்கும் புலனின்பங்கள் ஏதுமில்லை.ஒருமணிநேர வாழ்க்கைக்காஎண்பது வருடங்களை ஆயத்தகாலாகக் கோண்டிருக்கிறோம்.

வாழ்க்கை என்று நாம் சொல்வதெல்லாம் வாழ்க்கை அல்ல. பெரும்பாலான நேரங்களில் நாம் பிழைத்துக்கொண்டிருக்கிறோம். மண்ணில் வாழும் கோடானுகோடி உயிரினங்கள் பிழைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஒன்றை ஒன்று வெற்றிகொள்கின்றன. உண்கின்றன. உறவுகொள்கின்றன. அது வாழ்க்கை அல்ல.

பிழைப்புக்கு நடுவே நாம் நம் இருப்பை உணரும் கணங்கள் உண்டு. ஒரு பெருவெற்றியின் கணத்தில் நாம் நம்மை உணர்கிறோம். ஒரு மகத்தான இன்பத்தில் நாம் நம்மை உணர்கிறோம். ஒரு பெரும் துயரத்தில் அவமானத்தில் நாம் நம்மை உணர்கிறோம். சாதாரணமான வாழ்க்கையின் கணங்களை விட பலமடங்கு எடைகொண்ட கணங்களாக அவை ஆகிவிடுகின்றன. அக்கணங்களில் நாம் அறிவது நம் இருத்தலை. நாம் இம்மண்ணில் செலவழிக்கும்காலத்தில் செறிவான தருணங்களாக இருப்பவை நம் இருத்தலின் கணங்களே. அவையே நம் நினைவில் எப்போதும் அழியாமலிருக்கின்றன. உங்கள் வாழ்க்கையைச் சொல்லுங்கள் என்று சொன்னால் ஒருமணிநேரத்தில் நீங்கள் சொல்லிமுடிக்கும் அனைத்தும் நீங்கள் இருந்த கணங்களின் தொகுப்பே.

ஆனால் அதுவும் அல்ல வாழ்க்கை. வாழ்க்கை என்பது நம் இருப்பையும் மீறிச்செல்லும் பிரக்ஞையால் ஆனது. வாழ்க்கை நிகழ்வது வெளியே அல்ல. இங்கு அமர்ந்திருக்கும் ஒருவரைச் சுட்டி இதோ இந்த அவையில் இவர் இந்த உரையைக் கேட்டபடி இவர் அமர்ந்திருக்கிறார் என்று சொல்லிவிடமுடியும். ஆனால் அவர் வாழ்வது இங்கு மட்டுமல்ல. இங்கிருந்து எங்கோ எவ்வளவோ பெரிய உலகங்களில் அவர் வாழ்ந்துகொண்டு இங்கே இருந்துகொண்டிருக்க முடியும்

அகவாழ்க்கையே வாழ்க்கை. உங்கள் அகம் எந்த அளவுக்கு விரிகிறதோ அந்த அளவுக்கே உங்கள் வாழ்க்கை பெரிதானது. உங்கள் அகம் இப்பிரபஞ்சத்தைத் தழுவி விரியும் தருணம் உங்களுக்கிருந்தால் உங்கள் வாழ்க்கையும் பிரபஞ்சமளாவியதாக ஆகிறது.

இந்த சாஸ்தா மலையை பழங்காலத்தில் செவ்விந்திய பழங்குடிகளில் மிகச்சிலரே ஏறிச்சென்று கண்டிருப்பார்கள். பல்லாயிரம்பேர் அதன் கீழே சமவெளியில் நின்று அதன் மாபெரும் வெள்ளிமுகடைக் கண்டு கைகூப்பியிருப்பார்கள். இன்று அதன் முகடுவரை சாலை செல்கிறது. அதன் உச்சிவரை தனியாகச் சென்று அதன் முடியில் கால் வைத்து யாஹூ என்று கூக்குரலிட்டு திரும்பும் வெள்ளை இளைஞர்களை இன்று காண்கிறோம். நண்பர்களே யார் அதிகமாக வாழ்கிறார்கள்? யாருடைய வாழ்க்கை பெரிது?

கண்டிப்பாக அந்தப் பழங்குடியினரின் வாழ்க்கையே. அவன் அகம் அடையும் வாழ்க்கையின் மகத்துவத்தின் சிறு துளியைக்கூட இந்த இளைஞர்கள் அறிவதில்லை. ஒரு முழு வாழ்நாளையும் அந்த செவ்விந்தியன் இந்த சாஸ்தா மலையின் சாரலில் செலவிட்டு நிறைவுடன் கண்மூடுவான். ஆனால் அந்த இளைஞன் ஏறுவதற்கு அடுத்த மலைதேடி கிளிமஞ்சரோவுக்கு அல்லது எவெரெஸ்டுக்குச் செல்வான்.

வாழ்க்கை நிகழ்வது மானுட அகத்தில் என்றேன். பிழைத்தலும் இருத்தலும் அல்ல அது. அது தன்னைச்சுற்றிய அனைத்தில் இருந்தும் விதைகளை எடுத்துக்கொண்டு தன்கற்பனையின் உள்ளுணர்வின் ஈரத்தால் அதை முளைக்க வைத்து தன்னுடைய அந்தரங்க வனத்தை உருவாக்கிக் கொண்டு அதற்குள் உலவுவது. ஆம், ஒரு புல்லின் இதழே போதும்….

ஒரு புல்லின்ன் இதழ் போதும் என்று சொன்னவனின் நாடு இது. வால்ட் விட்மான் இந்த நாட்டு மக்களுக்கு கற்றுக்கொண்டுக்க முற்பட்டது அதைத்தான். நீங்கள் வெளியே பார்க்கும் இந்த இயற்கை என்பது வெறும் பொருள்கூட்டமல்ல என்று சொன்னான். இது உங்கள் அகம். உங்கள் அகமாக இதை எண்ணிக்கொண்டால் இது முடிவிலாது பெருகும். இதை பொருள் என்று கொண்டால் உங்கள் அகம் இப்பொருள் அளவே சுருங்கும்.

வால்விட்மானின் நாடு அவரை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டது? எமர்சனையும் தோரோவையும் அது எந்த அளவுக்கு புரிந்துகொண்டது? எனக்கு ஐயமாகவே இருக்கிறது. இருக்கலாம். சிலர் எப்போதும் இருப்பார்கள். அவர்களின் சொற்கள் வீணாகாது. ஆனால் அவர்கள் மிகமிகச்சிலரே என்ற எண்ணமே இந்த மண்ணில் எனக்கு வந்தபடியே இருக்கிறது. ஒரு புல்லின் இதழ் மட்டுமே போதும் என்ற பரிபூரணம் அவர்களுக்கு இருக்கிறதா? தோரோவின் வால்டன் குளத்தை பார்த்தேன். அது ஒரு சுற்றுலாத்தலாமாக இருக்கிறது. நீச்சல் பயிற்சிகள்நீர்ச்சறுக்கு விளையாட்டுகாள் விளையாட்டுபப்டகுகள்….. வெறும் கேளிக்கை…அவர்களில் எவராவது தோரோ கண்ட அந்த வால்டன் குளத்தைக் காண்கிறார்களா? அது இயற்கையின் தெளிந்தவிழி அல்லவா?

நீங்கள் எங்கும் பிழைக்கலாம். எந்தெந்த வகையிலோ இருப்பை உணரலாம். ஆனால் உங்கள் அகம் முழுமையான வாழ்க்கையை நோக்கி விரியாவிட்டால் நீங்கள் வாழ்க்கையை இழந்துவிடுகிறீர்கள். வெளியே உங்கள் உலகம் விரிந்துகொண்டே இருக்கும். உள்ளே உங்கள் வாழ்க்கை சுருங்கிக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் மகத்தானவற்றை விலையாகக் கொடுத்து சில்லறைவிஷயங்களைப் பெற்றுக்கொண்டவராக உணர்வீர்கள். வாழ்க்கையை வாழாத எவருக்கும் அப்படி ஒரு கணம் வாழ்க்கையில் வந்தே தீரும்.

அந்த வெறுமையின் ஆசனத்தில்தான் நம் முதியவர்களில் பெரும்பாலானவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அதிருப்தி இல்லாத முதியவர்களின் முகங்களை இப்போது காண்பதே அரிதாக இருக்கிறது கிராமங்களில் செல்லும்போது வாழ்ந்து முதிர்ந்து நிறைந்த முகங்களைப் பார்க்க முடிகிறது. அந்தமுகங்களைப் பார்க்கும்போது நினைத்தை எல்லாம் அடைந்தவர்கள் என நாம் எண்ணும் முதிய முகங்களில் ஏன் அந்த வெறுமையும் எரிச்சலும் சேர்ந்துகிடக்கின்றன என்ற பிரமிப்பு எழுகிறது. ஆம், இழந் வாழ்க்கையை தாளமுடியாத ஏக்கத்துடன் திரும்பிப்பார்க்கும் கணம் ஒன்றுவந்தே தீரும்

ஒருமனிதன் வாழ்நாளில்வாழும் புறவாழ்க்கை மிக மிக எல்லைக்குட்பட்டது. அவன் எத்தனை சாகசக்காரனாக இருந்தாலும், தன் வாழ்நாள்முழுக்க அவன் அலைந்து திரிந்தாலும் அவன் வாழ்க்கை மிகச்சிறியது. ஆம், ஒரே சமயத்தில் இரண்டு நாற்காலிகளில் அமரும் வரம் மனிதனுக்கு அளிக்கப்படவில்லை.அவன் நடிக்கும் வேடங்கள் சிலவே இருக்க முடியும். நீங்கள் கணிப்பொறி நிபுணராக இருந்தால் நீங்கள் பாலைவனத்து நாடோடிப் பாடகனாக வாழ முடியாது. நீங்கள் பாலைவனத்து நாடோடி என்றால் நீங்கள் விவசாயி இல்லை.

இலக்கியம் ஒரு புல்நுனியை வைத்து ஒரு காட்டை உருவாக்கிக் கொள்ளும் கலை. உங்கள் சிறிய வாழ்க்கைக்குள் மாபெரும் வாழ்க்கையை நிகழ்த்தும் கலை. உங்கள் கற்பனை மூலம் ஒரு வாழ்க்கைக்குள் நீங்கள் பலநூறு பல்லாயிரம் வாழ்க்கையை வாழமுடியும். இலக்கியம் உங்களுக்கு எதை அளிக்கிறதென்று கேட்டீர்கள் என்றால் இன்னும் பெரிய வாழ்க்கையை என்றே பதில் சொல்லுவேன்

நீங்கள் பிழைக்க விரும்பினால் உங்களுக்கு இலக்கியம் தேவையில்லை. ஆம் இலக்கியமே இல்லாமல் தன் வாழ்நாளை ஒருவர் கழித்துவிடமுடியும் என நான் நினைக்கிறேன். அந்தக் குறையையே அவர் ஆறியாமலும் இருக்க முடியும். ஒருவருடைய இருப்பை நிறுவ இலக்கியம் தேவையில்லை.

ஆனால் ஒருவர் வாழ விரும்பினால் அவருக்கு இலக்கியம் ஒரு மாபெரும் வாய்ப்பை கொடுக்கிறது. அவரது வாழ்க்கையை அது முடிவிலாததாக ஆக்குகிறது.

இலக்கியம் அதை எப்படி நிகழ்த்துகிறது? இலக்கியம் என்பது மொழியால் ஆனது. மொழி என்பது குறியீடுகளின் பெருவெளி. பல்லாயிரம் வருடங்களாக நம் முன்னோர் வாழ்ந்தவாழ்க்கை முழுக்க மொழிக்குள் குறியீடுகளாக மாறி நிறைந்துகிடக்கின்றன. அவற்றை மாற்றி மாற்றி அமைத்து மேலும் மேலும் புதிய அனுபவங்களை உருவாக்குகிறது இலக்கியம்.

சாஸ்தா மலையின் மீது இமயமலையை படியவிடுகிறது இலக்கியம். இமயமலைமீது திருவண்னாமலையை படிய விடுகிறது. ஒவ்வொரு அனுபவத்தையும் அதுவரை நம் முன்னோர் அடைந்த பேரனுபவங்களுடன் இணைத்து ஒரே அனுபவமாக ஆக்கிவிடுகிறது.

இந்த சாஸ்தாமலையை நான் வந்து நின்று பார்க்கும்போது நான் மட்டும் அதைப் பார்க்கவில்லை. என் மொழி அதை பார்க்கிறது. என் மொழியின் ஆழத்தில் உறையும் கோடானுகோடி முன்னோர்களின் கண்கள் அதைப் பார்க்கின்றன. கபிலன் பார்க்கிறான். கம்பன் பார்க்கிறான். சிவவாக்கியர் பார்க்கிறார்.

அந்தப்பார்வையைக் கொண்டுதான் நான் இந்தமலையை ஒரு பிரபஞ்ச அனுபவமாக ஆக்கிக் கொண்டு அதில் நிற்கிறேன். இந்த மலை எனக்கு இதைப்பார்க்கும் எத்தனையோ பேர் இம்மி கூட அடையமுடியாத பேரனுபவமாக ஆகிறது.

ஆம், நீங்கள் தனிமனிதனாக ஓர் அனுபவத்தை அடையலாம். பல்லாயிரம் வருட மரபின் ஒரு துளியாக நின்றுகொண்டு அவ்வனுபவத்தை அடைகையில் அது பிரம்மாண்டமாகிறது. ஒரு தமிழனாக ஓர் இந்தியனாக நின்று நீங்கள் அடையும் அனுபவம் மகத்தானது. நாம் அவ்வகையின் நம் முன்னோர்களால் ஆசீர்வதிக்கபப்ட்டிருக்கிறோம். கம்பனின்மொழியால் சாஸ்தாமலையைக் காணும் வாய்ப்பென்பது சாதாரணமான ஒன்றல்ல. இந்த மண்ணில் மிகமிகமிகச் சில சமூகங்களுக்கே அந்த வரம் அளிக்கப்பட்டிருக்கிறதென்பதை நினைவுகூருங்கள்.

மொழியின் ஆழத்தை நீங்கள் கற்பனைசெய்துவிடமுடியாது நண்பரகளே. திருவண்ணாமலையின் ஐதீகம் உங்களுக்கு தெரியுமென நினைக்கிறேன். அங்கே சிவபெருமான் ஒருமாபெரும் நெருப்புத்தூணாக எழுந்தான். அவன் அடிகாண பெருமாள் சென்றார். முடிகாண பிரம்மா சென்றார்.

அந்த மலையே சிவனின் தோற்றம் எனப்பாடுகிறது. ஆகவேதான் அதற்கு அருணமலை என்று பெயர். சிவந்த மலை. அருண என்றால் தழலின் நிறம். சோணகிரி சோணாசலம என்றும அதற்கு பெயருண்டு.

நண்பர்களே அந்த மலை ஒரு எரிமலை. ஆனால் அது கடைசியாக வெடித்து பல லட்சம் வருடங்கள் ஆகின்றன. அன்று அந்த மலை நெருப்புத்தூணாக வெடித்துபாதாளத்தில் இருந்து வானைத்தொட்டு எழுவதைக் கண்டது யார்? அப்போது மனிதன் இருந்தனா? ஏதோ நியாண்டர்தால் குரங்கு அதைக் கண்டிருக்க வேண்டும். அதன் நினைவில் அது பதிந்திருக்கவேண்டும். அது எப்போது மொழிவடிவம் கொண்டது எப்போது அது தமிழாகியது?

அந்த நினைவை இன்றும் திருகார்த்திகை அன்று அந்த மலைமீது தீபம் போட்டு நாம் கொண்டாடுகிறோம். நீங்கள் அதைப் பார்க்கவேண்டும். எரிமலையின் வாய்போல ஒரு எரியும் குழி. அதற்குள் சூடமும் நெய்யும் விறகும்போட்டு எரியச்செய்து பலகிலோமீட்டர் தொலைவுக்கு தெரியும்படிச்செய்கிறார்கள். ஆம், எரிமலையை மீண்டும் நிகழ்த்துகிறார்கள். நாம் கற்பனைகூட செய்யமுடியாத ஏதோ தொல்பழங்காலத்தில் இருந்து அந்த நினைவு நீண்டுவந்து நம் நிகழ்காலத்தில் எரிந்துகொண்டிருக்கிறது.

சாஸ்தாமலை முன் நின்ற நான் அந்த எரிமலையைப் பார்க்கும்போது என் அகத்தில் நின்று அதைப்பார்க்கும் தமிழ் அந்த நியாண்டர்தால் மனிதன் கண்ட எரிமலையையும் காண்கிறேன். அந்த மாபெரும் அனுபவத்தில் தான் நான் வாழ்கிறேன். அதையே நான் வாழ்க்கை என்றேன்.

இந்த மலையை தன் இறைவடிவமாகக் கண்ட இங்குள்ள செவ்விந்தியனின் உள்ளத்தின் எழுச்சியை என் அகம் அதி துல்லியமாக உள்வாங்கிக் கொள்கிறது. ஏனென்றால் அதே மனஎழுச்சியை அடைந்த ஒரு மூதாதையின் மனத்தை என் மொழி வழியாக நான் அடைந்திருக்கிறேன்.

அந்நிலையில் தேசங்களின் எல்லைகளை தாண்டி கடல்களின் இடைவெளிகளை தாண்டி நான இந்தச்செவ்விந்தியர்களின் அகத்தில் நுழைய முடிகிறது. இங்குவந்த வெள்ளையர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத அவன் அகத்தை நான் அறிகிறேன். அவனையும் என் மூதாதையாக எண்ண என்னால் முடிகிறது.

மொழியினூடாக நான் செல்லும் மானுட அகம் என்னை தூய மனிதனாக இங்கே நிறுத்துகிறது. இங்கே எல்லா மனிதர்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறவனாக நான் ஆகிறேன்.

இலக்கியம் அளிக்கும் மன விரிவென்பது அதுதான். ஒருபக்கம் அது நம் வேர்களுக்குள் நம்மை கொண்டுசெல்கிறது. அது மானுடத்தின் ஆழம் என்பதனால் நம்மை மானுட குலம் அனைத்துக்கும் சொந்தக்காரனாகவும் ஆக்குகிறது. உங்களை இந்தியனாக, தமிழனாக உணரச்செய்யும் இலக்கியம் உங்களை மானுடனாகவும் உணரச்செய்கிறது

இந்தசாஸ்தா மலையை அண்ணாமலையாக எண்ணி கைகூப்புகிறேன். இதை என் ஊர் வேளிமலையாக எண்ணி கைகூப்புகிறேன். இதை இப்பிரபஞ்சமாக எண்ணி கைகூப்புகிரேன். இப்பூமியில் உள்ள கோடானுகோடி கூழாங்கற்களில் ஒன்றாக எண்ணி கைகூப்புகிறேன்

அந்த தருணத்தில் நான் ஒன்றை உணர்கிறேன். இந்த என் மன எழுச்சி இதோ மொழியில் பதிவாகிறது. மொழியில்இருக்கும் பல்லாயிரம் அனுபவங்களுடன் அதுவும் இணைகிறது. இனி இதற்கு அழிவில்லை. இது என்றுமிருக்கும். மொழி என்னும் குறியீட்டுப்பெருவெளியில் அணையாத விண்மீனாக அதுவும் இருக்கும்.

ஆம், பிழைத்தலுக்கு முடிவுண்டு. இருத்தலுக்கு முடிவுண்டு. வாழ்க்கைக்கு முடிவில்லை. வாழ்க்க அழியாது. வாழ்க்கை என்பது என் வாழ்க்கை அல்ல. அது வாழ்க்கை. அது என்றுமிருக்கும்.

இதையே மரணமின்மை என்றார்கள் முன்னோர். . மரணமின்மை என்றால்அமுதம்.. அமுதும் தமிழும் ஒன்று என்றார்கள்.

ஓர் இலக்கியபபடைப்பென்பது அந்த அமுதத்தின் ஒரு துளி.

நன்றி

[சாக்ரமன்டோ [கலிஃபோர்னியா] தமிழ்ச்சங்கம் சார்பில் 16-8-2009 நடந்த சந்திப்பு நிகழ்ழ்ச்சியில் ஆற்றப்பட்ட உரை],